அத்தியாயம் 1
அத்தியாயம் 1: அருட்பிரகாச வள்ளலார்

வள்ளலார் என்று உலகோரால் போற்றப்படும் இராமலிங்க அடிகள் (1823-1874), எல்லையில்லாக் கருணையை உலகிற்குப் போதித்து, கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியாய் தனிப்பெரும் கருணையாய் இருப்பவர் என்று இயற்கை உண்மை கடவுளாகிய “அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை” இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் அருளாளர். உலகம் மனித நேயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருந்த காலத்தில், ‘ஆன்ம நேயத்தை’ (சகல ஜீவராசிகளையும் தன்னுயிர் போலப் பார்க்கும் நிலை) உலகுக்கு போதித்தவர் வள்ளல் பெருமான். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்" என்பதே அவரது ஒரே மூச்சாக இருந்தது. “என் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலே இரக்கம் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணே” — வள்ளலார் இப்படி உயிர் இரக்கமும் அவரும் வேறில்லை என்று, இரக்கம் நீங்கினால் தன் உயிர் நீங்கிடும் என்று ஈடில்லா உயிர் இரக்கத்தின் கருணையே வடிவாய் இருந்தவர் வள்ளல் பெருமான். அனைத்து உயிர்களிலும் உறையும் அருள் ஒளியான அருட்பெருஞ்ஜோதியை வழிபட, 'சுத்த சன்மார்க்கம்' என்னும் தூய நெறியை உலகுக்கு வழங்கினார். 'திருவருட்பா' எனத் தொகுக்கப்பட்ட அவரது பாடல்கள், மனித குலத்தை அன்பு, தயவு மற்றும் அறவாழ்வுக்கு அழைக்கின்றன. "உயிர்களிடம் காட்டும் கருணையே (ஜீவகாருண்யமே) உண்மையான இறைவழிபாடு" என முழங்கியவர் நம் வள்ளல் பெருமான். இப்படி எல்லையில்லா உயிர் இரக்கத்தின் மூலமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று, 1874 ஜனவரி 30 அன்று, மேட்டுக்குப்பத்தில் உள்ள தனது 'சித்தி வளாக' அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். தன் உடலை ஒளி தேகமாக (ஒளி உடம்பாக) மாற்றி அருட்பெருஞ்ஜோதியாகவே கலந்தவர் வள்ளல் பெருமான் எனும் மாபெரும் அருட்சித்தர்.






